சிங்கப்பூருக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் $20,000 ரொக்கம் இருந்தால் பயணிகள் அதை ஏன் தெரிவிக்கவேண்டும்?
சிங்கப்பூருக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் 20,000 வெள்ளி அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை ரொக்கமாக வைத்திருந்தால் பயணிகள் அதனைத் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாகப் பயணம் செய்யும் முன்பு 72 மணி நேரத்துக்குள் அதனைச் செய்ய வேண்டும்.
அண்மையில் 10 பேர் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது 20,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கத்தை எடுத்துவந்ததைத் தெரிவிக்காததால் சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
ஏன் தெரிவிக்க வேண்டும்?
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை அடையாளம் காண அவ்வாறு செய்வது அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும்.
CNAயிடம் பேசிய சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகம் அப்துல் ரஹீம் ( Razwana Begum Abdul Rahim) அதனைப் பகிர்ந்துகொண்டார்.
$20,000 என்ற வரம்பு எதற்காக?
அது ஒரு நியாயமான வரம்பு என்று கூறுகிறார் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ராஜன் சுப்ரமணியம்.
சில சம்பவங்களில் அந்தத் தொகையை எடுத்துவருவதற்கான காரணத்தை விளக்க வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு அந்தப் பணம் தனியார் மருத்துவமனைக்கான கட்டணம், குடும்பத்துக்கான அவசர உதவி என்று கூறும்போது அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இருக்கும்.
பரிசுத் தொகை, வணிகப் பரிவர்த்தனை, கல்விச் செலவு போன்ற மேலும் சில சட்டபூர்வமான காரணங்களும் இருக்கலாம்.
பணத்தை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றால்?
அதிகபட்சம் 3 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது கூடியபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.