சீனக் கும்பலிடம் ‘இணைய அடிமை’களாகச் சிக்கித் தவிக்கும் 3,000 இந்தியர்கள்.

சீன இணைய மோசடிக் கும்பலால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட கிட்டத்தட்ட 3,000 இந்தியர்கள் கம்போடியாவில் சிக்கித் தவிப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர்களில் பெண்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கம்போடியாவில் இருந்தபடி, மற்றவர்கள் சந்தேகப்படாத வகையில், ஆடையின்றி காணொளி அழைப்பு விடுத்து, இந்தியாவில் இருப்பவர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

சீன மோசடிக்காரர்களின் வலையில் வீழ்ந்து, பின் அவர்களிடமிருந்து தப்பி, இந்தியா திரும்பிய முன்ஷி பிரகாஷ் மூலம் இச்சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், கட்டடப் பொறியியல் பட்டதாரி. ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், வேலை இணையத்தளங்கள் மூலம் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார்.

“கம்போடியாவிலிருந்து விஜய் என்ற முகவர் என்னைத் தொடர்புகொண்டார். ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி, முதலில் மலேசியாவிற்கு அழைத்துச் சென்றார்.

“2024 மார்ச் 12ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து கம்போடியத் தலைநகர் நோம்பென்னிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு விஜய் சார்பாக ஒருவர் 85,000 ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் சீனர்கள் சிலர் எனது கடப்பிதழைப் பறித்துக்கொண்டு, கிரோங் பெவட் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

“கட்டடங்கள் பல கொண்ட வளாகம் அது. அங்கு ‘சி’ கட்டடத்தில் மற்ற இந்தியர்களுடன் நான் அடைக்கப்பட்டேன். தெலுங்கிலும் மற்ற மொழிகளிலும் பெண்களின் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்குவது குறித்து எங்களுக்குப் பத்து நாள்கள் பயிற்சியளிக்கப்பட்டது.

“பின்னர் என்னை ஒரு வாரத்திற்கு இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் என்னை வெளியில் கொண்டுவந்தனர். ஆனாலும், மோசடி செய்யும்படி தொடர்ந்து கட்டாயப்படுத்தப்பட்டேன்.

“எப்படியோ ஒரு செல்ஃபி காணொளி எடுத்து, நான் அனுபவிக்கும் கொடுமைகளை விவரித்து, தமிழ்நாட்டிலுள்ள என் சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்தான் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்,” என்று பிரகாஷ் விளக்கமாகக் கூறினார்.

இதனையடுத்து, கம்போடியாவிலுள்ள இந்தியத் தூதரகமும் தெலுங்கானா, ஆந்திர மாநில அரசுகளும் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கின.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16ஆம் தேதி ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து கம்போடியக் காவல்துறை பிரகாஷை மீட்டது. பின்னர் ஜூலை 5ஆம் தேதி அவர் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து மொத்தம் பத்துப் பேர் மீட்கப்பட்டனர்.

ஏறக்குறைய 3,000 இந்தியர்கள் கம்போடியாவில் சிக்கித் தவிக்கின்றனர் என்றும் அவர்களில் பலரும் தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரகாஷ் கூறினார்.

கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களைத் தான் சந்தித்ததாகவும் பிரகாஷ் குறிப்பிட்டார். அவர்கள் எல்லாருமே வெளிநாட்டு வேலை என நம்ப வைத்து ஏமாற்றப்பட்டதாகவும் பிரகாஷ் கூறினார்.

இந்த ‘இணைய அடிமை’களைக் கொண்டு ஈட்டும் பணத்தை மின்னிலக்க நாணயமாகவும், அதன்பின் அமெரிக்க டாலராகவும், இறுதியில் சீன யுவானாகவும் அந்த மோசடிக் கும்பல் மாற்றுவதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.