இந்தியச் சமூகத்தை மலேசிய அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது.
மலேசிய இந்தியர்களைத் தமது தலைமையின்கீழ் செயல்படும் ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி அளித்துள்ளார்.
மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்த தமது அரசாங்கம் வழங்கியுள்ள கூடுதல் நிதி இதற்குச் சான்று என்றார் அவர்.
தமது தொகுதியான தம்பூனில் ஜூலை 8ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களைப் பிரதமர் அன்வார் சந்தித்துப் பேசினார்.
இதற்கு முன்பு தமது அரசாங்கம், மலேசிய இந்தியர்கள் உருமாற்றுப் பிரிவான ‘மித்ரா’வுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருந்ததாக அவர் கூறினார். பிறகு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் வழங்கியதை திரு அன்வார் சுட்டினார்.
“இந்திய சமூகத்தின் நலன் குறித்து அதன் பிரதிநிதிகள் என்னை அணுகினால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வேன். ‘மித்ரா’ பல சவால்களை எதிர்நோக்குவதாகப் பேசப்படுகிறது. அது உண்மையல்ல. அதற்கு 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
“சிறு வணிகங்களில் ஈடுபடும் இந்தியர்களுக்கும் கிராமங்களில் வசிக்கும் வசதி குறைந்த இந்தியர்களுக்கும் உதவும் வகையில் கூடுதலாக 50 மில்லியன் தந்துள்ளோம்.
“கல்வியை முடித்திருக்கும் இந்திய இளையர்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை கல்வி, பயிற்சி வாய்ப்புகளை வழங்க கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சரும் துணைப் பிரதமருமான அகமது ஸாஹிட் ஹமிடியிடம் தெரிவித்துள்ளேன்.
“இந்திய மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்குமாறு பெட்ரோனாஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன். எனவே, மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி இந்தியச் சமூகத் தலைவர்கள் பேசாமல், கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தினால் மக்களுக்கு இந்தியர்கள் மீது அனுதாபம் ஏற்படாது.
“தமிழ்மொழியைக் கற்பிக்க மேலும் பலருக்குப் பயிற்சி அளிக்கும்படி கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்மொழியைக் கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். தமிழ்மொழி ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாது.
“ஊழல் மற்றும் பேராசை பிடித்த தலைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற அரசாங்கமும் இந்தியச் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாது, இனவெறியர்கள், தீவிர சமயக் கொள்கைகளைக் கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்தும் நாட்டைக் காக்க வேண்டும். அவர்கள் எந்த இனம், சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. மலேசியப் பிரதமராக நான் பதவி வகிக்கும் வரை நாட்டைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்,” என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.