பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலைய அதிபர்கள் சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள்
ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவையில் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
நேற்று (09) இரவு இயக்கப்படவிருந்த அனைத்து இரவு அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
புகையிரத சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்க சீசன் டிக்கெட்டை பயன்படுத்த முடியும்.
பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (09) மாலை ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, பெலியத்த மற்றும் மாத்தறையிலிருந்து புகையிரதங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
காலி மற்றும் அளுத்கமவிலிருந்து பல ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (10) பணிக்கு சமூகமளிக்காத நிலைய அதிபர்கள் சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.