2 மீட்டர் உயரம் கொண்ட நுழைவு வாயிலைத் தாவிக் குதித்த 92 வயது மூதாட்டி (Video).
சீனாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஷான்டாங் மாநிலத்தில் உள்ள தாதிமை இல்லத்தில் இருக்கும் 92 வயது மூதாட்டி ஒருவர், அந்த இல்லத்தின் 2.15 மீட்டர் உயரம் கொண்ட நுழைவு வாயிலைத் தாவி குதிக்கும் காணொளி இணையத்தில் பரவலானது.
மூதாட்டி ஒருவர் உலோக நுழைவாயில் ஒன்றின் மேற்புறத்தை லாவகமாகப் பிடிப்பதையும் தன் கால்களை வைப்பதற்குப் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடித்த பிறகு அதில் கால்களை ஊன்றிக் கவனமாக அந்த வாயிலின் மேல் ஏறுவதையும் சீனாவின் சமூக ஊடகத் தளமான ‘வெய்போவில் வெளியான காணொளியில் காண முடிந்தது.
மேலும், தன் உடலை கவனமாகச் சுழற்றி, வாயிலின் மறுபக்கத்தில் இறங்குவதையும் இணையத்தில் வெளியான காட்சிகளில் இணையவாசிகள் பார்த்தனர்.
ஜூலை 4ஆம் தேதி இணையத்தில் வெளியான 24 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளி, 1.25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அந்த மூதாட்டி அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தாதிமை இல்லத்தின் இயக்குநர் ‘தி பேப்பர்’ எனும் சீன நாளிதழிடம் தெரிவித்தார்.
1.6 மீட்டர் உயரம் கொண்ட அந்த மூதாட்டி உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வமுடையவர் என்றும் அவரைத் தாதிமை இல்லத்திற்கு அருகில் இல்லப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர் என அவர் மேலும் கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்தது.
வயதுக்கு மீறிய அவருடைய சுறுசுறுப்பான செயலும் அவரது திடல்தடத் திறனும் சீன இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியது.