மாணவர்களின் பேய் பயத்தை போக்க ஆசிரியர் செய்த சம்பவம்

மாணவர்களின் பேய் பயத்தை போக்க ஆசிரியர் செய்த செயலுக்கு அவரை பாராட்டி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் ஆனந்த்பூர் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக 5 ம் வகுப்பு அறையில் இருந்து வினோத சத்தம் வருவதாகவும், இங்கு பேய் இருப்பதாகவும் பள்ளி மாணவ, மாணவிகள் பயத்தில் இருந்தனர்.
இந்த பேய் பயத்தின் காரணமாக ஒரு மாணவர் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்று விட்டார். இந்நிலையில் பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியர் ரவீந்தர் பேய் எல்லாம் ஒன்றும் இல்லை என கூறிய போதும் யாரும் அதை ஏற்கவில்லை.
இதனையடுத்து பேய் பயத்தை போக்க ஆசிரியர் ஒரு முயற்சியை கையிலெடுத்தார். இதன்படி அம்மாவாசை அன்று பேய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அறையில் இரவு முழுவதும் இருப்பதாக மாணவர்களிடம் கூறினார். அம்மாவாசை அன்று இரவு 8 மணிக்கு பெட்ஷீட் உடன் அந்த வகுப்பறையில் நுழைந்துள்ளார். மறுநாள் காலை 6 மணிக்கு மாணவர்கள் வந்து பார்த்த பொது எந்தவித அசம்பாவிதமுமின்றி ஆசிரியர் இருந்துள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர் ரவீந்தர் உயிருடன் வெளியே வந்தபோது, பேய் இல்லை என்று மாணவர்கள் இறுதியாக நம்பினர். மாணவர்களின் பேய் பயத்தை போக்கிய ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த செயலுக்கு வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.