ரயில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது … நாளை காலை முதல் ரயில்கள் வழமை போல ஓடும்!
போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்ததாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் வேலைக்குச் சென்ற பின், சேவையை விட்டு விலகியதாகக் கொடுக்க இருந்த கடிதங்களை திரும்பப் பெறுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் “சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதப்படும்” கடிதங்கள் வழங்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (11) பிற்பகல் தெரிவித்தார்.
இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் தொடர்பில் பாரிய கூட்டுப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க இன்று மாலைக்குள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.
எவ்வாறாயினும், அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பிந்திய இணைப்பு
புகையிரத நிலைய அதிபர்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடிவுக்கு வந்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்தன குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு அனுப்பப்பட்ட கடிதங்களை மீளப்பெறுமாறு தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் இன்று நள்ளிரவுக்குள் பணிக்கு சமூகமளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் வாய்மொழியாக அறிவித்துள்ளார்.