நுவரெலியாவில் அபாயகரமான விபத்து தவிர்க்கப்பட்டது… 40 பேர் காயம்…
நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நுவரெலியா லபுகெலே டொப்பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேசத்திலுள்ள பிரதான சுற்றுலா விடுதியொன்றின் (Grand Hotel) பணியாளர்களை நுவரெலியாவிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாவிற்காக ஏற்றிச் சென்ற வேளையில் 11ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் பிரேக் திடீரென பழுதானதால், வளைவு பகுதியில் மேல் சாலையில் இருந்து கீழ் சாலைக்கு பேருந்து கவிழ்ந்தது.
பிரதேசவாசிகள் மற்றும் நுவரெலியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், காயமடைந்தவர்களில் சிலருக்கு எலும்புகள் உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 41 பேர் பயணித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.