இணைய மிரட்டலால் பெண் தற்கொலை – 2ஆவது சந்தேக நபர் கைது.

மலேசியாவில் இஷா (Esha) என்று பரவலாக அறியப்படும் சமூக ஊடகப் பிரபலமான ராஜேஸ்வரி அப்பாவு தற்கொலை செய்துகொண்டதன் தொடர்பில் 2ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தத் தகவலை மலேசியாவின் The New Strait Times நாளேடு வெளியிட்டது.

40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் ஸ்தாப்பாக் (Setapak) நகரில் நேற்று (10 ஜூலை) மாலை 6.30 மணிக்குக் கைதானார். அவர் தற்போது செந்தூல் (Sentul) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆடவர் “Dulal Brothers” எனும் TikTok கணக்குடன் தொடர்புடையவர்.

இஷாவின் தற்கொலை தொடர்பில் இதற்குமுன்னர் கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரான 35 வயதுப் பெண்ணின் தடுப்புக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் ‘Alphaquinnsha’ என்ற TikTok கணக்கை வைத்துள்ளார்.

இணைய மிரட்டலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 30 வயது இஷா இம்மாதம் 5ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இஷாவின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

அதற்கு முந்தைய நாள், தமக்கு எதிராக இணையத்தில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தொல்லைகள் குறித்தும் இஷா காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இஷாவின் தற்கொலை தொடர்பில் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 9 பேரிடம் காவல்துறை வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.