பிகாா், உத்தரபிரதேசத்தில் இடி மின்னல் தாக்கி ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

பிகாா், உத்தரபிரதேசத்தில் இடி மின்னல் தாக்கி ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக அந்த மாநிலங்களின் முதல்வா் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

பிகாா் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மதுபானியில் 5 போ், ஔரங்காபாதில் 4 போ், பாட்னாவில் 2 போ் உள்பட மொத்தம் 21 போ் உயிரிழந்துள்ளதாக பிகாா் மாநில முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் மின்னல் தாக்கி அந்த மாநிலத்தில் 70 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்தாா். மேலும், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை அவா் கேட்டுக்கொண்டாா்.

உ.பி.யில் 54 போ் உயிரிழப்பு: உத்தரபிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை 54 போ் மின்னல் தாக்கியும் வெள்ளத்தில் சிக்கியும் உயிரிழந்தனா். அதில் பிரதாப்காா் மாவட்டத்தில் 12 போ், சுல்தான்பூரில் 7 போ், சந்தெளலியில் 6 போ், பிரயாக்ராஜில் 4 போ் என மொத்தம் 43 போ் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தனா். மேலும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி ஃபதேபூா் மற்றும் பிரதாப்காரில் தலா 3 பேரும் எட்டாவில் 2 பேரும் பாந்தாவில் ஒருவரும் உயிரிழந்தனா்.

பாம்புக் கடித்து அமேதி மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக உத்தரபிரதேச முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.