வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் செவ்வாயன்று கவனவீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தத் தகவலை வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்தப் போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி எதிர்கால இளைய தலைமுறைகளும் எம்மைப் போல் அவலநிலையை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையிலான கல்விச் சீர்திருத்தத்தை வலியுறுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான வேலையில்லாப் பிரச்சினை என்பது பட்டதாரிகளை மாத்திரமல்ல அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் சமூகத்தையும் வாழ்வாதார மற்றும் பொருளாதார ரீதியாக வெகுவாகப் பாதித்துள்ளதுடன் எதிர்காலத் தலைமுறைகளையும் முழு சமுதாயத்தையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, தற்போதைய தேர்தல் காலத்தில் எமக்கான பிரச்சினைகளை வெளிக்கொணர்வதன் மூலம் ஏதேனும் ஒரு வகையிலான சாதகமான வாய்ப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

போராட்டங்கள் மூலம் மட்டுமே எங்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை நிதர்சனமான உண்மை. எனவே, இதனை உணர்ந்து அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் ஒன்றிணைந்து தொழில் உரிமைக்கான ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.