மொட்டு கட்சியின் முழு ஆதரவை ரணிலுக்கு பெற வைக்கும் முயற்சியில் தினேஷ்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு , அதை நிறைவேற்றாமை மற்றும் கட்சியை கரைய செய்ய முயன்ற விடயங்களில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஏமாற்றி வருவதால் , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என மொட்டுக் கட்சி உறுதியான தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே அந்த மனநிலையை மாற்றுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியும் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கப்பாடு ஓன்றுக்கு வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கட்சியின் சார்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்திய பிறகு அமைச்சர் பதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் , அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட மூத்தவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். .
பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனின் முதல் தவணை பெறுதல், கடனின் இரண்டாம் தவணை பெறுதல் என ஒவ்வொரு சூழ்நிலையையும் கூறி காலம் தாழ்த்தி ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்காக செயல்பட்டு , அவர் தோற்கடிக்கப்படுவாரானால், மொட்டுக் கட்சி மேலும் கரைந்துவிடும் என கட்சியின் பலமானவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.