10 தேங்காய் திருட்டு கொலையில் முடிந்தது : கொலையாளி கைது…
ரத்கம, ரணபனதெனிய பிரதேசத்தில் தென்னை நிலத்தின் உரிமையாளர் ஒருவரின் 10 தேங்காய்களை திருடியது தொடர்பான தகராறில் ,தென்னை நிலத்தின் உரிமையாளரை தேங்காய் முள்ளால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரை ரத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரத்கம, ரணபனதெனிய பகுதியைச் சேர்ந்த தடல்லகே விமலசேன (வயது 67) என்பவரே தேங்காய் முள்ளால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நாளை (15) காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ரத்கம, கனேகொட, வலக்கடை பகுதியைச் சேர்ந்த ‘களுபேட்ட’ என அழைக்கப்படும் குமாரவாடு சுமித் (49) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12ஆம் திகதி) மாலை 6 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், அன்று இரவு 7.00 மணியளவில் இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (12) இரவு காலி பதில் நீதவான் திரு.லலித் பத்திரன கொலை விசாரணையை மேற்கொண்டதுடன் நேற்று (13) காலி, கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
உயிரிழந்தவர் ரத்கம, ரணபனதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு நிலத்தின் உரிமையாளர் எனவும், அங்கு தேங்காய் மற்றும் தேங்காய் மட்டைகளை விற்பனை செய்து வாழ்ந்து வந்தவர் எனவும் ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் , அவரது தாயார் மற்றும் தாயின் சகோதரியுடன் வசித்து வந்தார்.
இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தை துபாயில் வசிக்கின்றனர். சந்தேகநபர் தனது சிறிய தென்னந்தோப்பு காணியில் 10 தேங்காய்களை பறித்து விற்பனை செய்ததாகவும் , அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலின் விளைவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தேங்காய் உரிப்பதற்காக பயன்படுத்திய இரும்புக் கூர்முனையை எடுத்து உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியமை பொலிஸ் விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இறந்தவரின் தலையில் தேங்காய் உரிப்பதற்காக பயன்படுத்தும் இரும்புக் கூர்முனையால் மூன்று தடவைகள் தாக்கியதாகவும், அப்போது தான் மது அருந்தி போதையில் இருந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.