கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்விற்கு விரைவில் தீர்வு காண்பேன்: கலையரசன்
கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் குறித்த பிரதேசத்தில் வாழும் அனைத்து இன மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் சிறந்த தீர்மானமொன்றை விரைவில் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல தசாப்தங்களாக எமது கட்சி பேணி வந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை கடந்த தேர்தலில் இழந்துள்ளது.
இந்த ஆசன இழப்பிற்கு கல்முனை உப பிரதேச செயலக விடயமும் ஒரு பிரதான காரணமாகும். இதனால் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில் எமது கட்சி காணப்படுகின்றது.
இதனால், குறித்த பிரதேசத்தில் வாழும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பாடாத வகையில் தீர்வை பெறுவதே எனது நோக்கமாகும். இது தொடர்பில் கல்முனை பிரதேசத்தில் வாழும் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சமயத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தையின் ஊடாக விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என்றார்
Sathasivam Nirojan