‘சஜித் உதவினால் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை வழங்குவேன்’ – ஜனாதிபதி.
நாட்டைக் காப்பாற்ற சஜித் பிரேமதாச உதவினால், தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை வழங்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டியில் இன்று (14) தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறிய ஜனாதிபதி, இப்போது ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என SJB கூறுவதாகவும், ஊழலுக்கு எதிராக SJBயுடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நிபந்தனை ஒன்று உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சஜித்தின் பாடசாலைகளுக்கு பஸ்களை கொள்வனவு செய்ய பணம் வழங்கியது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற “இணைந்தே ஜெயிப்போம்” தொடர் மக்கள் பேரணியின் இரண்டாவது பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கண்டி பொதுச்சந்தை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த பேரணியை பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்பாடு செய்திருந்தார்.