33 இந்தியக் கொத்தடிமை ஊழியர்களை மீட்ட இத்தாலியக் காவலர்கள்…
இத்தாலியின் வெரோனா மாகாணத்தில் இந்திய ஊழியர்களைக் கொத்தடிமைகளாக வேலை வாங்கி வந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், பண்ணைகளில் அடிமைகள்போல் வேலை செய்து வந்த 33 இந்திய ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் உள்ள பண்ணைகளில் இந்திய ஊழியர்கள் வாரத்தில் ஏழு நாள்களும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் 360 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சத்தைக் கட்டினால் இத்தாலியில் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தருவதாகக் கூறி இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதோடு கூடுதலாக ரூ.13 லட்சத்தைச் செலுத்தினால் நிரந்தர வேலை அனுமதி வழங்கப்படும் என்றும் இந்திய ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைதாகியுள்ள இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள், சட்டபூர்வமான குடியிருப்புச் சான்று கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என இத்தாலியக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இத்தாலியிலும் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதன் காரணமாக அங்கு சட்டத்துக்குப் புறம்பாக அரசின் அனுமதியின்றி புலம்பெயர் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த சத்னம் சிங், 31, என்ற இந்திய ஊழியரின் கை இயந்திரத்தில் சிக்கித் துண்டானது.
இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சை எதுவும் அளிக்காமல் அப்படியே சாலையில் தோட்டத்தின் உரிமையாளர்கள் விட்டுச் சென்றனர். அதன்பின்னர் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை ஊழியர்கள் மீதான அத்துமீறல் நடவடிக்கைகள் கவனம் பெற்றன.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இத்தாலியக் காவலர்கள் நடத்திய விசாரணையில், அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்த 33 இந்தியர்களை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர்.
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, கடந்த மாதம் வயல்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இந்தியக் குடியேறிகளில் ஒருவரான சிங் “மனிதாபிமானமற்ற செயல்களுக்கு” பலியாகிவிட்டார் என்று கூறினார்.
“இவை இத்தாலிய மக்களுக்குச் சொந்தமில்லாத மனிதாபிமானமற்ற செயல்கள். இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.