‘வழிபாட்டுக்காக போராடும் சமூகத்தின் கதை இது’ (WOLF Teaser)
நிற்பதற்கு நேரமின்றி பறந்துகொண்டே இருக்கிறார் பிரபுதேவா. அவரது நடிப்பில் உருவாகி உள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண்கின்றன.
பிரபுதேவா நடித்துள்ள ‘வுல்ஃப்’ திரைப்படம் தமிழில் விரைவில் திரைகாண உள்ளது.
குறைந்த செலவில் உருவாகும் பல படங்களில் பிரபுதேவாவைப் பார்க்க முடியும். நியாயமான ஊதியம், குறைந்தபட்ச லாபம் எனும் உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் அவரது படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இது வழிபாட்டுக்காகப் போராடும் ஒரு சமூகத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குநர் வினோ வெங்கடேஷ். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், பட வெளியீட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இது கற்பனையும் அறிவியலும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள படம். குறிப்பாக வசியக் கலையை (ஹிப்னாடிசம்) மையப்படுத்தி உருவாகும் படம் என்று விளக்கம் அளிக்கிறார் இயக்குநர்.
பொதுவாக ஒலி, ஒளி ஆகிய இரண்டையும் மையப்படுத்தித்தான் வசியம் செய்வார்கள். இந்தப் படம் அதைப் பின்பற்றி அமைக்கப்பட்ட கதையை அலசும் என்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.
600 ஆண்டுகளுக்கு முன்பு கோதாவரி நிலப்பரப்பில் தொடங்கும் இந்தக் கதை அந்தமான், தமிழ்நாடு, கர்நாடகா என பல இடங்களில் பயணமாகி நிகழ்காலத்தில் முடிவடையுமாம்.
“இது வழிபாட்டுக் கதை என்று சொல்லலாம். வசியக்கலையை மையமாக வைத்து ஹாலிவுட்டில் நிறைய படங்கள் உருவாகியுள்ளன. இந்திய அளவில் திகில் என்றால் குற்றங்களை அலசும் படம் என்றும் ‘ஹாரர்’ என்றால் பேய்ப் படம் என்றும் கருதுகிறோம். இது தவறு.
“இதற்கு முன்பு ‘கருப்பு ரோஜா’, ‘ஏழாம் அறிவு’ உள்ளிட்ட படங்களில் வசியக் கலையை ஓரளவுக்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இந்தப் புதிய படத்தில் வசியக்கலையை முழுமையாக அலசியுள்ளோம்.
“இதற்காக நிறைய புத்தகங்களைப் படித்து ஹாலிவுட் படங்களைப் பார்த்து முக்கியமான குறிப்புகளைச் சேகரித்தோம். உண்மையைச் சொல்வதானால் வசியக்கலை நம்மிடம் இருந்துதான் பிற நாடுகளுக்குச் சென்றுள்ளது எனலாம்.
“தமிழகத்தில் ராட்சசி, காட்டேரி வழிபாடு என்பது நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்துள்ளது. இது உண்மையான தகவல் என்பதை போகப்போக அறிந்து கொண்டேன். அப்படிப்பட்ட ஒரு காட்டேரி கோதாவரி நிலப்பரப்பில் இருந்ததாக புத்தகங்களில் பதிவாகி உள்ளது.
“பாதி பெண், பாதி புலி உருவம் கொண்டதுதான் காட்டேரி என மக்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. பலருக்கும் தெரியாத இத்தகவலை அடிப்படையாக வைத்து வசியக்கலையைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கிறார் வினோ வெங்கடேஷ்.
ஒரு சமூகத்துக்கான வழிபாட்டு உரிமையை தரக்கோரி போராடுகிறார் கதாநாயகன். அனைத்தையும் சமாளித்து வெற்றிபெற முடிந்ததா என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
“பிரபு தேவாவுடன் இணைந்து பணியாற்றியது இனிய அனுபவமாக இருந்தது. ஒரு வேலையை நம்மால் கச்சிதமாக முடிக்க இயலும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் பிரபு தேவாவை அணுக முடியும். நம் தரப்பில் அனைத்தும் தயாராக இருந்தால் அவரது ஒத்துழைப்பு எளிதில் கிடைத்துவிடும். ஒரு முறை அவரை நேரில் சந்தித்தபோது ஒரு கதையை விவரித்தேன். 45 நிமிடங்களுக்குள் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
“ஒரு நாய்க்குட்டியை மையமாக வைத்து நான் உருவாக்கிய குடும்பக்கதை அது. கதையின் இறுதிக்கட்டத்தை விவரித்தபோது கண்கலங்கிவிட்டார். எனினும் இந்தக் கதை படமாகவில்லை. பிறகு ‘வுல்ஃப்’ கதை அவருக்குப் பிடித்துப்போனது. உடனே படப்பிடிப்பைத் தொடங்கினோம்.
“இப்படத்தில் கதைப்படி எழுத்தாளராக நடித்துள்ளார் பிரபு தேவா. உடனே வேட்டி ஜிப்பா அணிந்து ஒரு ஜோல்னா பையுடன் வலம் வருவார் என முடிவு செய்ய வேண்டாம். அவர் நவீன எழுத்தாளராக திரையில் தோன்றுவார். ஒரு புத்தகத்தின் அட்டையை வைத்து புத்தகத்தை எடை போட முடியாது என்று சொல்வார்கள். அதுபோன்று எழுத்தாளரின் தோற்றத்தைக் கொண்டு எதையும் கூற இயலாது. இந்தப் படத்தில் மாறுபட்ட பிரபுதேவாவை திரையில் காண இயலும்,” என்கிறார் வினோ வெங்கடேஷ்.