அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் – தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்க படுகிறது. இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1,14,000 குழந்தைகள் பயன்பெற்றனர்.
இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி, இத்திட்டம் கூடுதல் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 18,50,000 மாணாக்கர்கள் பயன்பெற்றார்கள்.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் படி காமராஜர் பிறந்த நாளான இன்று (15.07.2024), திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு.
இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு செலவு ஏற்பட்டாலும், பரவாயில்லை ஒரு குழந்தை கூட பசியோடு வகுப்புகளில் அமர கூடாது என்று நோக்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன் என பேசியுள்ளார்.