ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கவே மாட்டேன்! – தாய்வீடு திரும்புங்கள் என்று சஜித்துக்கு ரணில் அழைப்பு.

“எனக்கு ராஜபக்ஷக்களைப் பாதுகாக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை வந்தபோது அவரை மட்டுமே பாதுகாத்துள்ளேன்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கட்சியைவிட தாய்நாடுதான் எமக்கு முக்கியம். தாய் நாட்டை நேசித்துவிட்டுதான் நாம் கட்சியை நேசிப்போம்;. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் செயற்பட்டுள்ளனர்.

நம்பிக்கையின் அடிப்படையில்தான் சவாலை நான் பொறுப்பேற்றேன். அதற்கு மொட்டுக் கட்சிலும் ஆதரவு வழங்கியது. அந்தக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.

மொட்டுக் கட்சியில் இருந்து ஒரு பிரிவினர் பிரிந்து சென்றனர். மஹிந்த பக்கம் பெரும்பான்மை இருந்தது. பீரிஸ் அணியினர் நல்லவர்களாம், ராஜபக்ஷக்கள் கெட்டவர்களாம். ராஜபக்ஷக்கள் கெட்டவர்களெனில், பீரிஸ் தரப்பினரும் கெட்டவர்கள்தான்.

எனக்கு ராஜபக்ஷக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு கிடையாது, ரணசிங்க பிரேமதாஸவை மட்டுமே நான் பாதுகாத்துள்ளேன். கட்சியில் குற்றப் பிரேரணை வந்தபோது அவருக்கு ஆதரவாக நானே முன்னின்றேன். வேறு எவரையும் நான் பாதுகாத்தது கிடையாது.

எனவே, நாட்டைப் பாதுகாக்க முன்வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கின்றேன். அதேபோல் தடை செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை சஜித்துக்கு வழங்கத் தயார். ஆகவே, நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் இணையுமாறு அழைக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.