அமெரிக்கர்களை நிதானமாக இருக்கும்படி வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நிதானமாக இருக்கும்படி அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அவரது கருத்து வந்துள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

பென்சில்வேனியாவில் ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற பிரசாரத்தின்போது டிரம்ப்பைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்தத் துப்பாக்கிக்காரன் 20 வயது தாமஸ் மேத்தியூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்குச் சொந்தமான கார் ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரசாரம் நடந்த இடத்திற்கு அருகில் அந்த கார் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அவர் டிரம்மைச் சுட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.

“அந்தச் சம்பவம் நாம் அனைவரும் ஒரு படி பின்னோக்கிச் செல்லவேண்டும் என்பதைக் காட்டுகிறது.

“நல்லவேளையாக டிரம்ப்பிற்குக் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை,” என்றார் திரு பைடன்.

“இத்தகைய வன்செயல்கள் வழக்கமாக நடப்பவை என்று நாம் கருதிவிடக்கூடாது. நம் நாட்டில் அரசியல் உரைகள் மிகவும் சூடுபிடித்துள்ளன. நிதானமாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று திரு பைடன் கூறினார்.

“அமெரிக்காவில் கருத்து வேறுபாடுகளுக்கு வாக்குப்பெட்டிகளில் தீர்வுகாண வேண்டுமே தவிர, தோட்டாக்களைக் கொண்டு அல்ல,” என்றார் அவர்.

திரு பைடன் அதிபர் அலுவலகத்தில் இந்த விவகாரத்தின் தொடர்பில் பேசினார்.

இதுவரை நான்கு அமெரிக்க அதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் அத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தம்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றுபட்டு இருக்குமாறு டோனல்ட் டிரம்ப் அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது சமூகக் கட்டமைப்பில் அவ்வாறு கேட்டுக்கொண்ட அவர், ‘தீமை வெல்வதற்கு’ அமெரிக்கர்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார்.

டிரம்ப்பின் மனைவி மிலேனியா, துப்பாக்கிக்காரன் ஓர் அரக்கன் என்று கூறினார்.

இதற்கிடையே, உலகத் தலைவர்கள் அந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அரசியலில் வன்முறைக்கு இடம் இல்லை என்று கிரெம்லின் ஜூலை 14ஆம் தேதி கூறியது.

Leave A Reply

Your email address will not be published.