‘ஒர்க் பெர்மிட்’ விதிமுறை மீறல்: பணிப்பெண் உட்பட மூவருக்கு சிறை
‘ஒர்க் பெர்மிட்’ தொடர்பான விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மூவருக்கு திங்கட்கிழமை (ஜூலை 15) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு பணிப்பெண் கடந்த 2021ஆம் ஆண்டே தண்டிக்கப்பட்டுவிட்டார்.
லோரெய்ன் புக்கட் அராட் என்னும் 48 வயதுப் பெண்மணி சிங்கப்பூரில் எம்பிளாய்மெண்ட் பாஸில் வேலை செய்கிறார். சந்தை நிர்வாக மேலாளரான அவர் பணிப்பெண் ஒருவரை வேலைக்கு எடுத்ததுபோல ஒர்க் பெர்மிட் ஆவணங்களைத் தயார் செய்தார். அதற்கு அவர் பணம் வாங்கிக்கொண்டார்.
ஆனால், ஒருகட்டத்தில் தமது பிள்ளையைப் பார்த்துக்கொள்ள அவருக்கு உண்மையிலேயே பணிப்பெண் தேவைப்பட்டது. ஆவணங்களின்படி, ஏற்கெனவே பணிப்பெண்ணை அவர் வேலைக்கு எடுத்திருந்ததால் தமது சகாவின் உதவியை நாடினார்.
72 வயது சிங்கப்பூரரான சுவாங் டியூ ஜோங் வெரோனிகா எனப்படும் அந்த சகா, உதவும்பொருட்டு பணிப்பெண்ணை வேலைக்கு எடுத்ததாக ஆவணம் தயார் செய்தார்.
ஆக, இரு பணிப்பெண்களுக்கு இரு முதலாளிகள் என்றாகிவிட்டது.
இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து நால்வரும் சிக்கினர்.
அவர்களில் லோரெய்னுக்கு ஒன்பது வார சிறையும் அவருக்கு உதவிய வெரோனிகாவுக்கு 12 நாள் சிறையும் விதிக்கப்பட்டது.
41 வயது பிலிப்பீன்ஸ் பணிப்பெண்ணான பெஸ்டானோ ஜீனட் மசின்சின் என்பவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றொரு பணிப்பெண்ணான செர்பஸ் மெலானி சிரேரியோவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.