வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நிபந்தனைகளுடன் பிணை! – அவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபா ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் மீதான விசாரணைகள் இன்று மன்றில் நடைபெற்றன. அதன்போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

வழக்கு விசாரணைகளை அடுத்து, வைத்தியரை 75 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவித்த மன்று, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் செல்லக்கூடாது, நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் முகநூல் நேரலையிலையோ, பதிவுகள் ஊடாகவோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் மன்று விதித்துள்ளது.

அதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டிய மற்றைய வைத்தியர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலங்களை வழங்குமாறும் மன்று கட்டளையிட்டது.

அத்துடன், வைத்தியர் அர்ச்சுனா, பொலிஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்கத் தவறினாலோ அல்லது ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு மன்று பணித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.