டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜேம்ஸ் வேன்ஸ்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தைச் சேர்ந்த செனட்டரான 39 வயது திரு ஜேம்ஸ் டேவிட் வேன்ஸ் என்பவரைத் தமது துணை அதிபர் வேட்பாளராக டோனல்ட் டிரம்ப் ஜூலை 15ஆம் தேதியன்று அறிவித்தார்.
திரு வேன்ஸ் ஒரு காலத்தில் டிரம்ப்பைக் கடுமையாக விமர்சித்தவர்.
ஆனால் பிறகு டிரம்ப்பின் ஆதரவாளராகவும் அவரைத் தற்காத்துப் பேசுபவராகவும் திரு வேன்ஸ் மாறினார்.
விஸ்கோன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது.
மாநாட்டின் துவக்கத்தில் துணை அதிபர் வேட்பாளராக திரு வேன்ஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒஹாயோ மாநிலத்தில் திரு வேன்ஸ் மிகவும் பிரபலமானவர்.
எனவே, அந்த மாநிலத்தின் வாக்குகளை டிரம்ப் பெறுவதற்கான சாத்தியம் அதிகம் என்று கூறப்படுகிறது
ஆனால் திரு வேன்ஸ் தீவிர பழமைவாதி என்பதால் பல இளம் வாக்காளர்கள், மிதவாதிகள் ஆகியோர் டிரம்ப்பிற்கு வாக்களிப்பது குறித்து யோசிக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பெண் ஒருவரை அல்லது வெள்ளைக்காரர் அல்லாது பிற இனத்தவரைத் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்குமாறு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
திரு வேன்ஸ் ‘ஹெல்பிலி எலஜி’ எனும் நூலை எழுதி பிரபலமடைந்தவர். அதில் அவர் தமது சொந்த ஊரில் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளியல் சவால்களைப் பற்றியும் ஏழ்மையைப் பற்றியும் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.
திரு வேன்ஸ் ஒஹாயோவின் தெற்குப் பகுதியில் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
அவர் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றியவர்.
அதன் பிறகு, யேல் சட்டப் பள்ளியில் சேர்ந்து பயில அவருக்கு உபகாரச்சம்பளம் வழங்கப்பட்டது.
அதையடுத்து, சான் ஃபிரான்சிஸ்கோவில் புதிதாக அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் முதலீட்டாளராக இருந்தார்.
திரு வேன்ஸ் திருமணமானவர்.
அவரது மனைவியின் பெயர் உஷா சிலுகுரி வேன்ஸ்.
திருவாட்டி உஷாவின் பெற்றோர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர்கள்.
திருவாட்டி உஷா, சான் டியாகோவில் வளர்ந்தவர்.
வழக்கறிஞரான திருவாட்டி உஷா, யேல் மற்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்.
யேல் சட்டப் பள்ளியில் திரு வேன்சுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் 2014ஆம் ஆண்டு கென்டக்கி மாநிலத்தில் திருமணம் செய்துகொண்டனர்.