வாடகைக்கு இருந்த பெண்ணை கேமராக்கள் பொருத்தி பார்த்த டேனியன் பூன் லீக்கு சிறை.
சிங்கப்பூர் : தமது வீட்டில், மறைவான இடங்களில் எட்டு கேமராக்களைப் பொருத்தி வாடகைக்கு இருந்த பெண்ணை அவருக்கே தெரியாமல் பார்த்த ஆடவருக்குப் பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் இச்சை காரணமாக 68 வயது டேனியல் பூன் லீ அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தமக்குத் தெரியாமல் பொருத்தப்பட்ட கேமராக்களில் ஒன்றை அந்த 29 வயது பெண் தற்செயலாகப் பார்த்ததை அடுத்து, பூன்னின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
அப்பெண் ஆடையில்லாமல் இருப்பதைக் காட்டும் 49 படங்கள் பூன் வசம் இருந்தன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பூன்னின் வீட்டில் உள்ள ஓர் அறையை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பெண் வாடகைக்கு எடுத்து தங்க தொடங்கினார்.
அதே வீட்டின் பிரதான படுக்கறையை பூன்னும் அவரது மனைவியும் பயன்படுத்தினர்.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இணையம் மூலம் எட்டு கேமராக்களை வாங்கி அதைத் தமது வீட்டில் பல பகுதிகளில் பூன் பொருத்தினார்.
வாடகைக்கு இருந்த பெண் தங்கிய அறையில் இருந்த யுஎஸ்பி மின்குதைகுழி, குளிர்சாதனப் பெட்டிக்கான குழாய் ஆகியவற்றில் பூன் கேமராக்களைப் பொருத்தினார்.
குளியலறையில் நீர் சூடேற்றுக் கருவிக்கு உள்ளே ஒரு கேமராவையும் வரவேற்பு அறையில் மூன்று கேமராக்களையும் சமையலறையில் ஒரு கேமராவையும் தமது சொந்த படுக்கையறையில் ஒரு கேமராவையும் பூன் பொருத்தினார்.
அனைத்து கேமராக்களும் அவரது கைப்பேசியுடன் இணைக்கப்பட்டன.
கைப்பேசி செயலி மூலம் கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை அவரால் நேரலையாகக் காண முடிந்தது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அப்பெண் கழிவறையைப் பயன்படுத்துவதை அல்லது தமது அறையில் ஆடை மாற்றுவதை பூன் காணொளி எடுத்தார்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று தமது அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்கான குழாயில் பொருத்தப்பட்டிருந்த கேமரா அப்பெண்ணின் கண்ணில் பட்டது.
இதுகுறித்து அப்பெண் தமது காதலர், உறவுக்காரர், மேற்பார்வையாளர், சக ஊழியர் ஆகியோரிடம் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் கழித்து, அவரது காதலர் அந்த வீட்டிற்கு நேரில் சென்றார். அது யுஎஸ்பி இணைப்புடனான கேமரா என்பதை உறுதி செய்தார்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
பூன் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.