தீவிரவாதப் போக்குடைய சிங்கப்பூரர் இருவருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு.

சுய தீவிரவாதப் போக்குடைய சிங்கப்பூரர்களான 14 வயது ஆண் இளையருக்கும் 33 வயது அன்னத்யா அன்னஹரி என்ற மாதுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2024 ஜூன், ஜூலை மாதங்களில் முறையே கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 15ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், இருவரும் இணையம் மூலம் சுய தீவிரவாதப் போக்கை தனித்தனியே வளர்த்துக்கொண்டதாகவும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இருவரின் சுய தீவிரவாதப் போக்கு தூண்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

உயர்நிலை மூன்றில் பயிலும் அந்த மாணவர் கறுப்புக் கொடி ராணுவத்தில் சேர்ந்து, போராடி, சிங்கப்பூர் மீது தாக்குதல்களை நடத்த நினைத்தார். அவரால் கறுப்புக் கொடி ராணுவத்தில் சேர வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள முடியாவிட்டால், அந்த ராணுவத்தின் அறிவுறுத்தல்களுக்‌கேற்ப சிங்கப்பூரில் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்ததாக திரு சண்முகம் சொன்னார்.

“சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது சிங்கப்பூரில் முஸ்லிம் அல்லாதவர்களைத் தாக்குவது குறித்தும் அவர் யோசித்தார்,” என்றார் அமைச்சர்.

தனது மற்ற பள்ளித் தோழர்களிடையே தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு முன் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு உடனடியாகத் தலையிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டு உத்தரவைப் பெற்ற ஆக இளைய நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் ஆணைபெற்ற கழகத்தின் முன்னாள் மேலாளரான அன்னத்யா, ஹமாஸ், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள், ஹிஸ்புல்லா, ஹூதிகள் முதலிய இஸ்லாமியப் போராளிகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் உள்ளிட்ட அக்‌ஸிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ் அமைப்புக்கு உறுதியுடன் ஆதரவளித்தார். இஸ்ரேலியர்களுக்கும் யூதர்களுக்கும் எதிரான வன்முறையையும் அவர் ஆதரித்தார்.

அக்‌ஸிஸ் அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளைப் போற்றிய சமூக ஊடக ஒளிவழி ஒன்றை நடத்தினார் அன்னத்யா.

“தனது இணையச் செயல்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பானது என்பதையும் ஒரு பொதுத்துறை ஊழியராக தான் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் அறிந்த அவர், தனது சக ஊழியர்களிடமிருந்து தனது தீவிரவாதக் கருத்துகளையும் செயல்பாடுகளையும் மறைத்தார்,” என்றார் அமைச்சர்.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டு உத்தரவைப் பெற்ற இரண்டாவது பொதுத்துறை ஊழியர் அன்னத்யா.

சிங்கப்பூரில் நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிநாட்டு மோதல்கள் எவ்வாறு பாதித்துள்ளன என்று கேட்கப்பட்ட கேள்விக்‌கு, மேற்கூறிய நிகழ்வுகள் சிங்கப்பூரின் உள்நாட்டு நிலப்பரப்பில் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டுவதாக சொன்னார்.

“தீவிரவாத விவகாரங்களின் அபாயத்தை அவை காட்டுகின்றன. நமது தேசிய பாதுகாப்பையும் சமூக நல்லிணக்கத்தையும் அவை அச்சுறுத்துகின்றன,” என்றார் அமைச்சர் சண்முகம்.

காஸா நிலைமை குறித்து சிங்கப்பூரர்கள் ஆழ்ந்த கவலையில் இருப்பது குறித்து அமைச்சர் பேசினார்.

“இது பாலஸ்தீனர்களைப் பாதிக்கும் பெரிய மனிதாபிமான நெருக்கடியாகும். என்னையும் சேர்த்து நம்மில் பலர் பாலஸ்தீனர்களின் அவல நிலைக்காக அனுதாபப்படுகிறோம். ஆனால் எந்தவொரு வெளிநாட்டு விவகாரத்திற்கு அனுதாபம் காட்டுவதை காரணமாகக் கூறி பயங்கரவாதத்தை ஆதரிக்கவோ அனுமதிக்கவோ முடியாது,” என்றார் அமைச்சர்.

அந்த இளையர் மீதும் அன்னத்யா மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரித்ததால் எடுக்கப்படவில்லையென்றும் ஆயுதமேந்திய வன்முறைக்கு அவர்கள் ஆதரவு கொடுத்ததே காரணம் என்றும் விளக்‌கினார் அமைச்சர்.

சுய தீவிரவாதப் போக்குக்கு எதிராக என்ன செய்யப்படுகிறது, குறிப்பாக அதில் ஈடுபடுபவர்கள் இளம் வயதினராக இருக்‌கும் வேளையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கேட்கப்பட்டபோது, உலகின் பல இடங்களைப் போலவே சிங்கப்பூரிலும் சுய தீவிரவாதப் போக்கை தொடர்ந்து தடுத்து வருவோம் என்று பதிலளித்தார் அவர்.

“இள வயதிலேயே பலர் சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளாகின்றனர். இது உலகளாவிய போக்காகும்.

“சிங்கப்பூரில் இதுவரை சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளான 40 சிங்கப்பூரர்களுக்கு எதிராக 2015 முதல் உள்துறைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 13 பேர், 20 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள்,” என்றார் அமைச்சர்.

சமூகப் பங்காளர்களுடன் இணைந்து இளையர்களின் தீவிரவாதப் போக்கை எதிர்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஈடுபடும் என்றார் அவர்.

“வயது, பாலினம், சமயம், தொழில் போன்ற எந்த பாகுபாடும் இன்றி, எவரும் தீவிரவாதப் போக்கால் பாதிக்‌கப்பட முடியும்.

“சிங்கப்பூரில் ஆயுதம் ஏந்திய வன்முறையை ஆதரிப்போர், பிரசாரம் செய்வோர், மேற்கொள்வோர், மேற்கொள்வதற்குத் தயாராகும் நபர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எப்படி வன்முறையை நியாயப்படுத்தினாலும், அந்த வன்முறை எங்கு நடந்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கடுமையான நடவடிக்கை எடுக்கும்,” என்றார் அமைச்சர்.

கைது செய்யப்படுவதற்குப் பதிலாக சுய தீவிரவாதப் போக்குடைய இரு சிங்கப்பூரர்களுக்‌கு ஏன் கட்டுப்பாட்டு உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டது என்ற கேள்விக்‌கு, அந்த நபர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமானது என்பதையும் எவ்வளவு அவசரமானது என்பதையும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு மதிப்பிடும் என்று அமைச்சர் கூறினார்.

“முடிந்தவரை அவர்களின் வாழ்க்கையைத் தொடர அவர்களுக்‌கு அனுமதி தரும் அதே நேரத்தில், தீவிரவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் பாதையிலிருந்து அவர்களை நகர்த்தவும் முயல்கிறோம்,” என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.