டிரம்ப் துப்பாக்கித் தாக்குதல் சமயம் குடும்பத்தைப் பாதுகாக்க விரைந்தவர் உயிரிழப்பு.
டோனல்ட் டிரம்ப் ஜூலை 13ஆம் தேதியன்று பென்ஸ்சில்வேனியாவில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது துப்பாக்கித் தாக்குதலில் இருந்து தப்பினார்.
துப்பாக்கித் தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது.
அச்சம்பவத்தில் துப்பாக்கிக்காரனை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றார்.
அப்போது பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது 50 வயது திரு கோரி கொம்பேரட்டோர் அங்கிருந்த தமது குடும்பத்தாரைப் பாதுகாக்க விரைந்தார்.
அவர்கள் மீது பாய்ந்து பாதுகாப்பு அரணாகத் தம்மை அவர் நிறுத்திக்கொண்டார். இதில் குண்டடிப்பட்ட அவர் உயிரிழந்தார்.
“அவர் இறப்பைச் செய்தியில் பார்த்துத்தான் எங்களுக்குத் தெரியவந்தது. ஒருவரது வெறுப்புணர்வு எங்கள் அன்புக்குரியவரின் உயிரைப் பறித்துவிட்டது,” என்று ஜூலை 14ஆம் தேதியன்று திரு கொம்பேரட்டோரின் சகோதரி திருவாட்டி டோன் கொம்பேரட்டோர் ஷேஃபர் கூறினார்.
மாண்ட திரு கொம்பேரட்டோருக்கு மனைவியும் 27 மற்றும் 24 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர்.
பென்ஸ்சில்வேனியாவைச் சேர்ந்த திரு கொம்பேரட்டோர், ஒரு தொண்டூழியத் தீயணைப்பு வீரர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமது உதவியாளர் ஒருவரைப் பதவி நீக்கம் செய்துள்ளதாக மிசிசிப்பி மாநிலத்தின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியான பென்னி தாம்சன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி செய்தவர் குறி தவறாமல் சுட்டிருக்க வேண்டும் என்று திருவாட்டி ஜேக்லின் மார்சோ சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்ததாக அவர் கூறினார்.
“நான் வன்முறையை ஆதரிப்பவர் அல்ல. ஆனால் அடுத்த முறை துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற பிறகு குறி தவறாமல் சுடவும்,” என்று திருவாட்டி மார்சோ பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக கடும் அதிருப்திக் குரல்கள் எழுந்ததும் அவர் பதவி நீக்கப்பட்டார்.
“ஜேக்லின் மார்சோவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்ற உறுப்பினராக பென்னி தாம்சனுக்கு அழைப்பு விடுக்கிறேன்,” என்று மிசிசிப்பி துணை ஆளுநர் டெல்பர்ட் ஹோஸ்மன் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து திருவாட்டி மார்சோ உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
வரும் நவம்பா் 5ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் அந்நாட்டின் முன்னாள் அதிபா் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா்.