‘கிளப் வசந்தவுக்கு நடந்தது போல உனக்கும் நடக்கும்..’ மருத்துவருக்கெதிராக சுவரொட்டிகள்
“கெக்கிராவவில் இருந்து செல்லாவிட்டால், கிளப் வசந்தவுக்கு நடந்தது போல உனக்கும் சம்பவம் நடக்கும்”, என கெக்கிராவ மருத்துவ அலுவலர் அலுவலக வளாக கட்டிடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி, கறுப்பு எண்ணெய் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் மாவட்ட தலைமை வைத்திய அதிகாரி மற்றும் செயலாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் மற்றும் கடுமையான வார்த்தைகளுடன் பல சுவரொட்டிகள் கெக்கிராவ வைத்திய அலுவலகத்திற்கு சொந்தமான பல கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கெக்கிராவ வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் நேற்று (15ம் திகதி) பணிக்கு வந்த போது, பிரதம வைத்திய அதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுத்த ஒரு குழுவினர், கடுமையான வார்த்தைகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியதுடன், அலுவலகத்திற்கு சொந்தமான இரண்டு கட்டிடங்கள் மீதும் கறுப்பு நிறத்தில் ஒயில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அனுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவபத்திரனவின் பணிப்புரையின் பேரில், கெக்கிராவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.எல்.எஸ். முனசிங்க தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.