டிரம்ப்பின் துணையதிபர் வேட்பாளர் மனைவி..இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் திரு. டோனல்ட் டிரம்ப்பின் துணையதிபர் வேட்பாளராக ஒஹாயோ (Ohio) மாநில செனட்டர் JD வேன்ஸ் (J.D. Vance) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இணையம் அவரைப் பற்றி மட்டும் பேசவில்லை..அவருடைய மனைவியைப் பற்றியும் பேசுகிறது.
வழக்கறிஞரும் முன்னாள் சட்ட உதவியாளருமான திருமதி உஷா வேன்ஸ் (Usha Vance) தமது அரசியல் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் திரு. வேன்ஸ் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திருமதி வேன்ஸ் கலிஃபோர்னியாவின் சான் டியேகோ (San Diego) நகரில் வளர்ந்தவர் என்று CNN செய்தி நிறுவனம் சொன்னது.
அவர் 2013இல் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் படித்தபோது திரு. வேன்ஸை முதன்முதலில் சந்தித்தார்.
‘வெள்ளையினத்தவர் பெரும்பான்மையாக உள்ள அமெரிக்காவில் ஏற்படும் சமூகச்
சீரழிவு’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இருவரும் பங்கேற்றனர்.
திரு. வேன்ஸ் நடுத்தர வருமானம் ஈட்டும் வெள்ளையினச் சமூகத்தில் வளர்ந்த அனுபவத்தை எடுத்துரைக்கும் சுயசரிதையை எழுத எண்ணினார்.
Hillbilly Elegy எனும் அந்த நூலை எழுதத் திருமதி வேன்ஸ் உதவி செய்தார். அது பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
“அவர் மிகப் பெரிய திறமைசாலி. 1,000 பக்கப் புத்தகத்தை சில மணி நேரத்தில் கரைத்துக் குடித்துவிடுவார்…”
“ஒவ்வொரு முடிவிலும் எனக்கு வழிகாட்டும் பெண் குரல் அவர்” என்று திரு. வேன்ஸ் தமது மனைவியை வருணித்ததுண்டு.
இருவரும் 2014இல் இரு சமயத் திருமணத்தில் இணைந்தனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் – இவான், விவேக், மிராபேல்.