தாய்லந்து ஹோட்டலில் 6 பேர் மரணம் – நஞ்சு ஊட்டப்பட்டிருக்கலாம்?
தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 6 பேர் மாண்டுகிடந்தது குறித்துக் அந்நாட்டுக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றிரவு (16 ஜூலை) அந்தச் சம்பவத்தில் மாண்டவர்களில் மூவர் ஆண்கள்,மூவர் பெண்கள்.
வியட்நாமியர்களான அவர்களில் சிலர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள்.
அனைவரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (13 & 14 ஜூலை) தனித்தனியாக ஹோட்டலை அடைந்தனர்.
அவர்கள் வெவ்வேறு அறைகளைப் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒரே அறையில் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர். அங்கு மோதல் நடந்ததற்கான அடையாளம் ஏதும் காணப்படவில்லை. அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏழாவது நபரைத் தேடி வருவதாகத் தாய்லந்துக் காவல்துறை கூறியது.
தாய்ல்ந்துப் பிரதமர் செட்டா தவிசின் (Srettha Thavisin), சம்பவம் நடந்த ஹோட்டலுக்குச் சென்று பார்வையிட்டார்.
சுற்றுலாத்துறையின் பாதிப்பைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனே நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
நிலைமையை அணுக்கமாய்க் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் விசாரணைக்கு உரிய உதவி வழங்கத் தயாராய் இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுப் பிரிவு கூறியது.
பேங்காக்கில் உள்ள வியட்நாம் தூதரகம் சம்பவம் குறித்துப் பதிலளிக்கவில்லை.