இங்கிலாந்து தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் , இங்கிலாந்து தோல்விக்குப் பொறுப்பேற்று விலகல்.
யூரோ 2024 இறுதி காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டு யூரோ கிண்ணத்தைக் கைப்பற்றத் தவறியது. அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று தமது பதவியிலிருந்து விலகினார் இங்கிலாந்து தேசிய காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கிண்ணத்தைப் பெறத் தவறியது. 2020ஆம் ஆண்டில் அது இத்தாலியிடம் தோல்வி கண்டது. இம்முறை அது ஸ்பெயினிடம் தோல்வி கண்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்துக்குப் பிறகு, இங்கிலாந்து குழுவில் தமது எதிர்காலம் குறித்து இங்கிலாந்து காற்பந்துச் சங்கத்துடன் பேசவிருப்பதாகக் கூறினார் 53 வயது சவுத்கேட்.
“ஒரு பெருமைமிக இங்கிலிஷ்காரரான நான் 57 முறை தேசிய குழுவில் விளையாடியிருக்கிறேன். தேசிய குழுவை வழிநடத்தும் அதன் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். இது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறாகும்,” என்று சவுத்கேட் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
“ஸ்பெயினுடன் நடந்த இறுதிப் போட்டிதான் எனது கடைசி ஆட்டம். இதுவரை 102 ஆட்டங்களில் இங்கிலாந்து குழுவின் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளேன்,” என்று சவுத்கேட் சொன்னார்.
இங்கிலாந்து காற்பந்துச் சங்கத்தின் தலைவரான பிரிட்டனின் இளவரசர் வில்லியம், சவுத்கேட்டின் சேவைக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
“கேரத் சவுத்கேட்டின் இடத்தை நிரப்பக்கூடிய தகுதியான நபரை நாங்கள் தேடத் தொடங்கி விட்டோம்,” என்றார் இங்கிலாந்து காற்பந்துச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் புல்லிங்ஹம்.