யாழில் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற பாழடைந்த வீட்டில் இயங்கி வந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது
யாழ் நகருக்கு அண்மித்த தெல்லிப்பளை பிரதேசத்தில் சிறுவர் இல்லம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, வடமாகாண சிறுவர் மற்றும் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகளினால் அந்த சிறுவர் இல்லம் சோதனையிடப்பட்டு நேற்று முன்தினம் (15) மூடப்பட்டது.
சிறுவர் இல்லத்தில் 12 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு தண்ணீர், கழிவறை வசதிகள் அல்லது வேறு எந்த அடிப்படை வசதிகளும் அனாதை இல்லத்தில் இல்லை.
மிகவும் பாழடைந்த வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கூட சரியாக பொருத்தப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் முன்னர் இயங்கி வந்த பெண்கள் பராமரிப்பு நிலையம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சிறுவர் மற்றும் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிறுவர் இல்லம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. .
சிறுவர் இல்லம் நடத்த முறையான உரிமமோ, அனுமதியோ இல்லாமல் அது இயங்கி வந்துள்ளது.
சிறுவர் இல்லம் மூடப்பட்டதையடுத்து சிறுவர் இல்லத்தில் இருந்த 12 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய அரச சிறுவர் இல்லங்களுக்கு மாற்றப்பட்டு அவ்விடத்தை நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.