இலங்கையின் எதிர்காலம் குறித்து பத்திரிகைக் கட்டுரைப் போட்டி!

நிதி முகாமைத்துவ சட்டமூலங்கள் மற்றும் பொருளாதார மாற்ற சட்டமூலங்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பத்திரிகை கட்டுரைப் போட்டியொன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
“முறையான அரச நிதி முகாமைத்துவம் மற்றும் நிலையான பொருளாதார மாற்றத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடைந்த எனது நாடு” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த தேசிய அளவிலான பத்திரிகைக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மற்றும் வெற்றி பெற்ற பாடசாலைகள் என்பவற்றுக்குப் பெறுமதி வாய்ந்த பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் பிரிவென் கல்வி நிறுவனங்கள், கல்வி அமைச்சின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசித் திகதி ஜூலை 31 ஆம் திகதியாகும். மேலும் போட்டி நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவம், ஆக்கங்களை அனுப்ப வேண்டிய விதம் தொடர்பான மேலதிக தகவல்களையும் சட்டமூலங்களையும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் https://www. dgi.gov.lk/contact-us/public-finance-management-bill இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.