லயன்களைக் கிராமங்களாக்கும் திட்டத்துக்கு உடன்படவே முடியாது! – திகாம்பரம் எம்.பி. திட்டவட்டம்.

“இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது. இதற்கு உடன்பட முடியாது. மக்களும் உடன்படமாட்டார்கள்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

“பெருந்தோட்ட குடியிருப்பு பகுதியைக் கிராமங்களாக அறிவிக்கும் திட்டம் பற்றியே பேச்சு நடத்த வந்திருந்தோம். நல்லாட்சியின்போது நான் அமைச்சராக இருந்தேன், தனி வீடுகள் அமைக்கப்பட்டே காணி உரித்துடன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இவர்கள் லயன்களைக் கிராமங்களாக்கப் பார்க்கின்றனர். இதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவாகக் குறிப்பிட்டோம்.

எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டு, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டே கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். காணி உரிமைக்கான எமது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.

நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்தான் இருக்கின்றோம். ஜனாதிபதியுடனான சந்திப்பில் தேர்தல் பற்றி பேசப்படவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.