கப்பலில் போதைப்பொருள்; இந்தியர்கள் மூவர் கைது.
இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கப்பலை வழிமறித்து அந்நாட்டு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அந்தக் கப்பலில் ஏறத்தாழ 106 கிலோ ‘கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ போதைப்பொருள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்ததாக ஜூலை 17ஆம் தேதியன்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் போதைப்பொருள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தோனீசிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லெஜண்ட் அக்வாரிஸ் என்ற பெயர் கொண்ட அந்தச் சரக்குக் கப்பல் கரிமுன் மாவட்டத்துக்கு அருகில் உள்ள பொங்கார் கடற்பகுதியில் இருந்தபோது அதிகாரிகள் அதில் ஏறி சோதனையிட்டனர்.
அக்கப்பல் ஆஸ்திரேலியாவின் பிரஸ்பன் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கப்பலை அதன் மாலுமி உட்பட பத்து சிப்பந்திகள் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் இந்தோனீசியர்கள்.
அவர்களுடன் மூன்று சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் கப்பலில் இருந்தனர்.
மூவரும் இந்திய நாட்டவர்கள்.
கப்பலில் இருந்த போதைப்பொருள் அந்த மூவருக்கும் சொந்தமானவை என்றும் அந்தக் கப்பல் பயணத்துக்கு அவர்கள்தான் ஏற்பாடு செய்திருந்ததாகவும் பாத்தாம் தீவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைவர் மார்தினஸ் ஹுகும் தெரிவித்தார்.
அந்தக் கப்பல் ஜூலை 9ஆம் தேதியன்று ஜோகூர் பாருவில் உள்ள தனியார் துறைமுகத்தை நோக்கி சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாருவில் உள்ள தனியார் துறைமுகத்தில் ஜூலை 12ஆம் தேதியன்று அந்த மூவரும் போதைப்பொருளைக் கப்பலில் ஏற்றி இயந்திர அறையில் வைத்ததாகவும் இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர்.
அப்போது அந்த கப்பலிலிருந்து வெளியேறி கரையில் இருக்குமாறு கப்பல் மாலுமியிடமும் சிப்பந்திகளிடமும் அவர்கள் கூறியதாக அறியப்படுகிறது.
அந்த மூன்று ஆடவர்களும் சிங்கப்பூரில் ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மூவரும் கப்பல் தொடர்பான பொறியியல் கல்வி பயின்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கப்பலில் போதைப்பொருள் இருப்பது தொடர்பாகப் பொதுமக்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததாக இந்தோனீசியக் காவல்துறை கூறியது. அவரது அடையாளத்தை அது வெளியிடவில்லை.
கப்பலின் மாலுமியும் சிப்பந்திகளும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த மூன்று சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனீசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படலாம்.