நில அபகரிப்பு செய்ய அமைச்சருக்கு உதவியதாக காவல் ஆய்வாளரும் கைது.
ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த நில மோசடியில் முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக காவல்துறை ஆய்வாளர் ஒருவரும் கைதாகி உள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் 22 ஏக்கர் நிலத்தை அபகரித்தார் என்பது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான புகார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, போலிச் சான்றிதழ்களின் உதவியோடு பத்திரப்பதிவு நடந்தது உறுதியானது. இதையடுத்து, இந்த வழக்கில் காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரணை நடத்தியது.
இதே வேளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த பிணை மனு இரண்டு முறை நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. மேலும் அவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நில அபகரிப்புக்கு காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், விஜய பாஸ்கருக்கு உதவி செய்தது அம்பலமானது. நில அபகரிப்புக்கு தேவைப்பட்ட தடையில்லா சான்று அளித்துள்ளார் பிருத்விராஜ். இதன் மூலம் நில மோசடி எளிதில் அரங்கேறியுள்ளது.
இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கையாக வில்லிவாக்கம் பகுதி ஆய்வாளராக இருந்த அவர், தாம்பரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ஆதாரங்கள், விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி பிரிவினர் பிருத்விராஜை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நீடித்து வருகிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்துள்ளார் பிருத்விராஜ். அப்போது அமைச்சருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.