இணையம் வழி துன்புறுத்தல் ; இருவர் மீது வழக்கு.
இணையம் வழி துன்புறுத்தல் காரணமாக ஜூலை 5ஆம் தேதியன்று மலேசியாவில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சமூக ஊடகப் பிரபலமும் தன்னார்வலரும் இந்து சமய ஆர்வலருமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி அப்பாஹு தமது வீட்டில் மாண்டு கிடந்தார்.
தம்மைச் சிலர் இணையம் மூலம் இழிவுபடுத்துவதாகவும் மிரட்டுவதாகவும் ஜூலை 4ஆம் தேதியன்று 30 வயது ராஜேஸ்வரி, காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அவரது மரணத்துக்குப் பிறகு 35 வயது பெண்ணும் 44 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.
மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் நோக்குடன் ஜூன் 30ஆம் தேதியன்று இரவு 10.12 மணி அளவில் டிக்டோக் வலைத்தளத்தில் ஆபாசக் கருத்துகளைப் பதிவிட்டதாக லாரி ஓட்டுநரான பி. சதிஷ்குமார் ஒப்புக்கொண்டார்.
தொடர்பு, பன்னூடகச் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை, 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஜூன் 30ஆம் தேதி இரவு 10.15 மணி அளவில் ராஜேஸ்வரியின் தாயாரான 56 வயது திருவாட்டி புஷ்பா பி. ராஜகோபாலின் மானத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசக் கருத்துகளைப் பதிவிட்டதாகவும் சதிஷ்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இரண்டாவது குற்றச்சாட்டை எதிர்த்து சதிஷ்குமார் வழக்கு கோரியுள்ளார்.
தமது மனைவி உடற்குறையுள்ளவர் என்றும் தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் சதிஷ்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமது மூன்று பிள்ளைகளில் இருவர் படித்துக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
சசிகுமாருக்கு 36,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது.
அவரது கடப்பிதழை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், அவர் மாதந்தோறும் காவல்நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று நடைபெறும்.
இதற்கிடையே, டிக்டோக் வலைத்தளம் வாயிலாகப் பிறருக்குக் கோபத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் வசைபாடிய குற்றத்துக்காக ஷாலினி பெரியசாமிக்கு 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏழு நாள் சிறைத் தண்டனைக்குப் பதிலாக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
தனியார் மனநலப் பராமரிப்புத் தாதிமை இல்லத்தின் உரிமையாளரான ஷாலினி, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
ஜூலை 1ஆம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் ஷாலினி இக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
டிக்டோக் வலைத்தளம் வாயிலாக அவர் ராஜேஸ்வரியை இழிவுபடுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மை எதிர்த்தவர்களை அவர் நேரலையில் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்திவிட்டு நீதிமன்றத்திலிருந்து சிரித்துக்கொண்டே வெளியேறினார் ஷாலினி.
ஷாலினிக்கு வெறும் 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது மனவேதனை அளிப்பதாகவும் அது நியாயமில்லை என்றும் ராஜேஸ்வரிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.