தாய்லாந்து ஹோட்டல் மரணம்: அறைக்குள் இருந்த ஒருவரே விஷம் வைத்துக் கொன்றிருக்கக்கூடும்.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஹோட்டலான கிராண்ட் ஹயாட் இராவான் ஹோட்டலில் ஜூலை 16ஆம் தேதியன்று ஆறு பேர் மாண்டு கிடந்தனர்.

இந்தத் தகவலைத் தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்டது.

இதுகுறித்து உடனடியாகத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தாய்லாந்துப் பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாண்டவர்களில் இருவர் அமெரிக்காவைச் சேர்ந்த வியட்னாமிய வம்சாவளியினர். மற்ற நான்கு பேரும் வியட்னாமைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் மூன்று ஆடவர்களும் மூன்று பெண்களும் அடங்குவர் என்று பிரதமர் ஸ்‌ரேட்டா தெரிவித்தார்.

இதற்கிடையே, அந்த அறையில் இருந்த ஆறு பேரில் ஒருவர் மற்றவர்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிட்டு அதே விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அப்பெண்ணைத் தாய்லாந்துக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் அமெரிக்காவைச் சேர்ந்த வியட்னாமிய வம்சாளிப் பெண் என்றும் அவரது பெயர் ஷெரின் சோங் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரணத்துக்கு முன்பு அந்த ஆறு பேரும் காப்பி அல்லது தேநீர் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் அவர்களது உடல்களில் காயங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒருவரது முகத்தில் மட்டும் காயம் இருந்ததாகவும் அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

உடற்கூராய்வு மூலம் மரணத்துக்கு ‘சைனைட்’ நஞ்சு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

அந்த ஆறு பேரும் அருந்திய காப்பி அல்லது தேநீரில் ‘சைனைட்’ நஞ்சு கலந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

புலன்விசாரணை அதிகாரிகள் சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பிறகே, அறையில் இருந்த ஒருவரே அங்கிருந்த மற்றவர்களைக் கொன்றிருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அந்த சாட்சிகளில் மரணமடைந்த ஒருவரின் மகளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரணங்களுக்குக் கடன் தொடர்பான விவகாரங்கள் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நொடித்துப்போன கட்டுமான வர்த்தகம் காரணமாக கடன் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த அறையில் இருந்தவர்கள் இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கடன் கொடுத்தவர்கள், கடன் வாங்கியவர்கள், கடன் அடைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தவர்கள் ஆகியோர் மாண்டதாக அறியப்படுகிறது.

அந்த ஆறு சடலங்களும் கண்டெடுக்கப்பட்ட அறை உட்புறத்திலிருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும் அறைக்குள் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அந்த ஆறு பேரின் மரணத்துக்கு வெளியிலிருந்து வேறு யாரும் காரணமாக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ), தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

மாண்டவர்களில் இருவர் அமெரிக்கர் என்பதால் எஃப்பிஐ விசாரணை நடத்துவதாக பிரதமர் ஸ்‌ரேத்தா கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.