4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு பிணை.
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரருக்கு , 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே கடந்த மார்ச் 28ஆம் திகதி தீர்ப்பளித்தார். .
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூரகல விகாரை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 2020 ஒக்டோபர் 21 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டியினால் ஞானசார தேரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், தாம் வெளியிட்ட அறிக்கைகளினால் முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபந்தி முன்னிலையில், தேரர் மன்னிப்பை கோரியிருந்தார்.
ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, மகாநாயக்க தேரர்கள் கூட அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.