‘நிறம் முக்கியமல்ல, திறமையே முக்கியம்!’
நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படமொன்றில் நாயகியாக நடித்து வருகிறேன். பெரும்பாடு பட்டுத்தான் இந்த உயரத்தை எட்டிப் பிடித்துள்ளேன். இந்த வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முன்பைவிடவும் கவனமாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் நடிகை பிரிகிடா சகா.
“நிறத்தை வைத்து எனக்குக் கிட்டிய ஏராளமான வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளேன். தற்போது திரையுலகில் சாதிப்பதற்கு நிறம் முக்கியமல்ல; திறமைதான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளேன்.
“அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகையாக வலம்வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை,” என்றும் பிரிகிடா கூறுகிறார்.
திரையுலகில் வாழையடி வாழையாகத் தொடரும் வாரிசு, குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சிலர் சாதித்து வரும் நிலையில், இதுபோன்ற எந்தப் பின்புலமும் இன்றி தங்களது திறமையை மட்டும் நம்பி ஒரு சிலர் வெற்றிபெறுகின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த இளம் நடிகை பிரிகிடா சகா.
இவரை ‘பவி டீச்சர்’ என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமாகியுள்ளார்.
தமிழக ஊடகம் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ள இவர், திரையுலகைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் நுழைந்து, ஒவ்வொரு விஷயத்திலும் அடிபட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
“ஆரம்பத்தில் பெரும்பாலும் அக்கா, தங்கை, தோழி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மட்டுமே அழைப்பு வந்தது. இப்படி நடித்துக்கொண்டு போனால் கடைசிவரை இதுபோன்ற வாய்ப்புகள்தான் வருமோ? இனிமேல் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் வராதோ? என்ற பயம் எப்போதும் என் மனதுக்குள் இருந்து வந்தது.
“ஆனால், இப்போது எனக்கு கிடைத்து வரும் நாயகி வாய்ப்புகள் மூலம் அந்தப் பயம் பறந்துபோய் விட்டது,” என்கிறார் பிரிகிடா.
“நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளேன். நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களில் நடித்தபோது சினிமாவில் நுழைவதற்கு ஆர்வம் ஏற்பட்டது.
“2018ல் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ படத்தில் நாயகியின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் நான் நடித்த முதல் படம்,” என்று கூறிய பிரிகிடா, அதன்பிறகு ‘ஆஹா கல்யாணம்’ இணையத் தொடரில் ‘பவி டீச்சர்’ பாத்திரத்தில் நடித்து முழுத் திறமையையும் வெளிப்படுத்தினேன்.
“இந்தத் தொடர் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
“பொது இடங்களில் பார்ப்பவர்களும் என்னை ‘பவி டீச்சர்’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
“இப்படி மக்கள் மத்தியில் பிரபலமானதால் 2019ல் எனக்கு ‘வைரல் ஸ்டார்’ என்ற விருதும் வழங்கினார்கள்.
“அதற்குப் பிறகு நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாணவியாக நடித்தேன். சிறிய பாத்திரம் என்றாலும் பெரும் வாய்ப்பாக நினைத்து விஜய்யுடன் நடித்தேன். இது என் திரைவாழ்வில் என்றும் மறக்கமுடியாத அனுபவமாக உள்ளது.
“ஒரு சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, கடைசி நேரத்தில் வாய்ப்புகள் இல்லை என சிலர் என்னைப் புறக்கணித்துள்ளனர்.
“இதனையும் தாண்டி நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அதற்கான பரிசாக ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது,” எனச் சொல்கிறார்.
கல்லூரிக்கான ஒப்படைப்பு ஒன்றைத் தயாரிப்பதற்காக உதவி இயக்குநராகப் பணியாற்ற நடிகர் பார்த்திபனை அணுகினேன்.
இரவின் நிழல்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். என் திறமையைப் பார்த்து பார்த்திபன், இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவேண்டும் என்று கூற, அதன்படி நடித்து அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து முகேன்ராவ் நடித்த ‘வேலன்’ படத்தில் நடித்து முடித்து, ‘சுள்ளான் சேது’ படத்தில் நாயகனுக்குச் சகோதரியாக நடித்தேன். தெலுங்கில் இரு படங்களில் நாயகியாக நடிக்கவும் வாய்ப்பு கிட்டியது.
சூரி நடிப்பில் அண்மையில் வெளிவந்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ‘கருடன்’ படத்திலும் நடித்துள்ள பிரிகிடா, அடுத்தடுத்த வாய்ப்புகள் தனது வீட்டின் கதவைத் தட்டும் நேரம் வந்துவிட்டதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்.