சுவாச நோய்க் கிருமிக்கு எதிரான புதிய தடுப்பூசிக்கு ஒப்புதல்.
சுவாசப் பாதையில் தொற்று ஏற்படக் காரணமாக உள்ள கிருமிக்கு எதிராக 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்தக் கிருமியால் ஏற்படும் சுவாச நோய்கள் முதியோர் சிலரிடையே கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
‘எரெக்ஸ்வி’ (Arexvy) எனப்படும் அந்தப் புதிய தடுப்பூசி, ‘ஜிஎஸ்கே’ என்ற பிரிட்டிஷ் மருத்துவ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் மே 10ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
எளிதில் தொற்றும் தன்மையுடைய ‘ஆர்எஸ்வி’, வயதான பெரியவர்களுக்குக் கூடுதல் அபாயங்களை ஏற்படுத்துவதால் அதற்கு எதிராக இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
இக்குறிப்பிட்ட கிருமிக்கு எதிரான புதிய ‘ஜிஎஸ்கே’ தடுப்பூசி, முதன்முதலாக சிங்கப்பூரில் வழங்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 50 முதல் 59 வயதுடைய பெரியவர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படுவது குறித்து தற்போது மறுஆய்வு செய்துவருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
ஒருசில தனியார் மருந்தகங்களிலும் நிபுணத்துவ மருந்தகங்களிலும் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்றது ஆணையம். இருப்பினும், மருந்தகங்களின் பட்டியலை அது வெளியிடவில்லை.
தசையில் ஒருமுறை மட்டும் செலுத்தப்படும் அந்தத் தடுப்பூசிக்கு, பல மருந்தகங்கள் $320 முதல் $350 வரை கட்டணம் வசூலிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.
நுரையீரல்களையும் சுவாசப் பாதைகளையும் பாதிக்கக்கூடிய ‘ஆர்எஸ்வி’, குளிர்காய்ச்சல் மற்றும் சாதாரண சளி போன்றது. இருமல், காய்ச்சல், சளி, உடம்பு வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும்.
ஆனால், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு ‘நிமோனியா’ மற்றும் ‘புரொங்கியலைட்டஸ்’ (pneumonia and bronchiolitis) எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படலாம்.
இதன் தொடர்பில் சுவாசப் பிரச்சினைகள் உள்ள முதியவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்றவற்றில் ‘எரெக்ஸ்வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.