பைடனுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று; பிரசாரக் கூட்டம் ரத்து.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவருக்கு இலேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.

ஜூலை 17ஆம் தேதி லாஸ் வேகஸ் நகருக்கு 81 வயது அதிபர் பைடன் பயணம் மேற்கொண்டபோது அவர் நோய்வாய்ப்பட்டிருப்பது தெரியவந்தது.

“அதிபர் பைடனுக்குத் தடுப்பூசியும் கூடுதல் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. அவருக்கு இலேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கெரின் ஜீன் பியேரி தெரிவித்தார்.

அதிபர் பைடனுக்கு சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொவிட்-19 பாதிப்பு காரணமாக அதிபர் பைடனின் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிபர் பைடனுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததும் அவர் லாஸ் வேகஸ் நகரிலிருந்து ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம் மூலம் டெலவேருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், அதிபர் தேர்தலை முன்னிட்டு டோனல்ட் டிரம்பிற்கும் அதிபர் பைடனுக்கும் இடையிலான விவாதத்தில், பைடன் தடுமாறியதை அடுத்து, போட்டியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக அவரது பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.