இணையச் சேவைக் கோளாறு – 84 விமானச் சேவைகளை ரத்துச் செய்த Turkish Airlines.
டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமான நிறுவனம் 84 சேவைகளை ரத்துச் செய்துள்ளது.
உலகளவில் ஏற்பட்ட இணையச் சேவைக் கோளாற்றால் அதன் கணினிக் கட்டமைப்புகள் வேலை செய்யவில்லை.
தடங்கலையும் பயணிகளின் சிரமத்தையும் தவிர்க்கச் சில விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்படும் என்று நிறுவனம் சொன்னது.
சேவைகளை விரைவில் வழக்கநிலைக்குக் கொண்டுவரப் பணியாற்றிவருவதாகவும் அது தெரிவித்தது.
ரத்துச் செய்யப்பட்ட பல சேவைகள் உள்நாட்டுச் சேவைகளும், ஐரோப்பாவுக்கான சேவைகளும் என்று நிறுவனம் சொன்னது.
செயல்பாடுகளைக் குறைத்துக் கட்டமைப்பைச் சீராக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
CrowdStrike மென்பொருளைப் பயன்படுத்தும் பல இடங்களில் சேவைத் தடை ஏற்பட்டிருப்பதாய்த் துருக்கியேவின் தகவல், தொடர்புத் தொழில்நுட்ப ஆணையம் கூறுகிறது.
இது இணையத் தாக்குதல் அல்ல என்பதையும் அது உறுதிப்படுத்தியது.
உலகெங்கும் ஏற்பட்டுள்ள இணையச் சேவைக் கோளாற்றால் விமான நிலையங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லந்து உள்ளிட்ட பல நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன.
தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் சிக்கியுள்ள ‘செய்தி’ நேயர் ஒருவர் அங்குள்ள நிலவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பயணிகளின் வருகையைப் பதிவு செய்வதில் பெரிய அளவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணியிலிருந்து Scoot வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் வரிசை சற்றும் நகரவில்லை.”
“நிலைமையைச் சமாளிக்க முடியாமல் ஊழியர்களும் திணறுகின்றனர்.”
“ஊழியர்கள் ஒவ்வொருவரின் விவரங்களையும் கையால் எழுதி நுழைவுச்சீட்டுப் பெற குறைந்தது 15 நிமிடமாகிறது”
என்றார் அந்தச் ‘செய்தி’ நேயர்.