டிரம்ப்பின் துணையதிபர் வேட்பாளர் JD வேன்ஸ் யார்?

அண்மை நாள்களில் இணையத்தில் அதிகம் பேசப்படும் நபராக அமெரிக்கத் துணையதிபர் வேட்பாளர் JD வேன்ஸ் (JD Vance) இருக்கிறார்.
அந்த ஒஹாயோ (Ohio) மாநில செனட்டரைத் தமது துணையதிபர் வேட்பாளராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
யார் இந்த JD வேன்ஸ்? தகவல்களைச் சேகரித்தது ‘செய்தி’.
39 வயது JD வேன்ஸ்ஸின் இயற்பெயர் ஜேம்ஸ் டோனல்ட் போவ்மேன் (James Donald Bowman).
இவர 1984 ஆகஸ்ட் மாதம் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள மிடில்ட்டன் (Middletown) நகரில் பிறந்தார்.
மிகச் சவாலான குழந்தைப் பருவம்…..
6 வயதானபோது வேன்ஸை அவரது தந்தை மாற்றான் தந்தைக்குத் தத்துக்கொடுத்தார்.
அவரது பெயர் ஜேம்ஸ் டேவிட் வேன்ஸ் (James David Vance) என்று மாறியது.
தந்தை குடும்பத்தைக் கைவிட்ட நிலையில் அவரது அம்மா போதைப்பொருளுக்கும் மதுபானத்துக்கும் அடிமையாகியிருந்தார்.
இதனால் திரு வேன்ஸ் கென்ட்டக்கியில் (Kentucky) உள்ள தமது தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
2013இல் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.
அங்குதான் தமது மனைவி உஷா சிலுக்குரியைச் (Usha Chilukuri) சந்தித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான திருமதி உஷா வழக்கறிஞரும் முன்னாள் சட்ட உதவியாளரும் ஆவார்.
திரு வேன்ஸ் உஷா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
2016இல் திரு வேன்ஸ் எழுதிய “Hillbilly Elegy” எனும் நினைவுக்குறிப்பு அவரைப் பிரபலமாக்கியது. அது திரைப்படமாகவும் வெளிவந்தது. துணையதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அந்தப் புத்தக விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
2022இல் ஜூனியர் செனட்டராகத் திரு வேன்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
– 2020 தேர்தல் முடிவுகள் அங்கீகரிக்கப்படுவதை அவர் எதிர்த்தார்.
– தேர்தல் பிரச்சினைகள் பற்றித் திரு டிரம்ப் முன்வைத்த கூற்றுகளை ஆதரித்தார்.
– கருக்கலைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
– உக்ரேனுக்கு அமெரிக்கா உதவி அனுப்புவதை எதிர்த்தார்.
ரயில் பாதுகாப்புக் குறித்து திரு வேன்ஸ் முன்வைத்த கருத்துகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
முக்கிய மாநிலங்களில் தொழிலாளர் வர்க்கங்களுக்கு இடையே வலுவான ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில் திரு வேன்ஸைத் திரு டிரம்ப் துணையதிபர் வேட்பாளராய் நியமித்திருப்பதாக CBS NEWS கூறுகிறது.