“அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பைடன் விலகக்கூடும்”.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து ஜோ பைடன் ஆலோசித்துவருகிறார்.

கூடிய விரைவில் அவர் போட்டியிலிருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று அக்கட்சி அதிகாரிகள் கருதுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்த அதிபர் தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்காமல் போகலாம் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

81 வயது திரு பைடன் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்புடன் நடந்த விவாதத்தில் மோசமாகத் தடுமாறியதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்துள்ளது.

பைடனின் வயது குறித்தும் அவர் நவம்பரில் வெற்றியடைவது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்க மக்களவை முன்னாள் நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) சில கருத்துக்கணிப்புகளின் தகவல்களைத் பைடனுடன் பகிர்ந்துகொண்டதாய் CNN கூறியது.

பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வெற்றியடையும் சாத்தியம் குறைவு என்றும் கருத்துக்கணிப்புகளில் தெரிவதாகத் திருவாட்டி பெலோசி கூறியுள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் (Barack Obama) தமது அக்கறைகளை வெளிப்படுத்தியதாக Washington Post குறிப்பிட்டது.

Leave A Reply

Your email address will not be published.