வெளியீட்டுக்குத் தயாராகும் புதிய தமிழ்ப் படங்கள்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தொழில் நுட்பப் பணிகள் தொடங்கி உள்ளன. அதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் அக்டோபர் 31ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதற்கிடையே, கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘மெய்யழகன்’ படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
இதை நடிகர் சூர்யாவின் ‘டூடி’ நிறுவனம் தயாரிக்க, ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்குகிறார். அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சென்னையில் நடந்து வந்த படப்படிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து வெளியீட்டுத் தேதியை அறிவிக்க ஏதுவாக புதிய சுவரொட்டி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இதே தேதியில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படமும் வெளியாகிறது.