நீட் வினாத்தாள் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிய விடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில், முக்கிய குற்றவாளியை இன்று(ஜூலை 20) கைது செய்துள்ளனர் சிபிஐ விசாரணைக் குழுவினர்.
கைது செய்யப்பட்டுள்ள முக்கியப் புள்ளி பி.டெக். பொறியியல் பட்டதாரி சஷி குமார் பஸ்வன் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிகார் தலைநகர் பாட்னாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசியவிட்டதில் இந்த நபருக்கு முக்கிய பங்கிருப்பதாகவும், நீட் தேர்வன்று அந்த நபர் ஹஸாரிபாக்கிலுள்ள் மையத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அந்த நபருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ மாணவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாகியுள்ள இருவரும் பரத்பூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு பயின்று வரும் குமார் மங்க்ளம் பிஷ்னோய், தீபேந்தர் குமார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு புகாா்கள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, மேற்கண்ட நபர்கள் குறித்த தகவல்களை விரைவில் வெளியிடுமெனத் தெரிகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) தேசிய தோ்வுகள் முகமை(என்டிஏ) வெளியிட்டுள்ள நிலையில், மேற்கண்ட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.