பெருந்தொகையான கடத்தல் பொருட்களை கடத்த உதவிய சுங்க அதிகாரிகள் குழு சஸ்பெண்ட்…
நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் மற்றும் மக்களுடன் இணைந்த முக்கிய நிறுவனமான சுங்க திணைக்களத்தில் பணிபுரியும் அதிகாரிகள் குழுவொன்றின் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் அழகுசாதன உபகரணங்கள் மற்றும் திரவ உரங்கள் இருந்ததாகவும், அவற்றை இறக்குமதி செய்வதற்கு உரிய அனுமதி கிடைக்காததால், கொள்கலன் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அழகுசாதனப் பொருட்களை கொண்டு வர மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும், திரவ உரங்களை கொண்டு வர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமமும் அவசியம்.
அவ்வாறான தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், கடந்த வாரம் அதிகாரிகள் குழுவினால் இந்த கொள்கலன் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.