குஜராத் மையத்தில் தேர்வெழுதிய 85 சதவீதம் பேர் தேர்ச்சி… சந்தேகத்தை கிளப்பும் நீட் தேர்வு முடிவுகள்!

நீட் தேர்வு நடந்த மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளில், குஜராத் மையத்தில் தேர்வெழுதிய 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் அம்பலமான நிலையில், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யும் வகையில் தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணையதளத்தில் தேசிய தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், குஜராத்தில் தேர்வு எழுதிய 85 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அதிகபட்சமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் மையத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில், 22,701 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜ்கோட் நகரில் மட்டும் 12 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும், 115 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 259 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 403 பேர் 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் நகரின் நீட் தேர்வு முடிவுகள், மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது பெரும் வித்தியாசத்தில் உள்ளன. நீட் தேர்வின் சராசரி தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது, சிகர் நகரின் தேர்ச்சி 575 சதவீதம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகர் நகரில் 149 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 2037 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 4297 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். இதனால், நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 6.8 சதவீத இடங்களை சிகர் நகரில் தேர்வெழுதியவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா நகரில், 74 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 1066 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இதே போல, புகார் எழுந்த தேர்வு மையங்களில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஹரியானா மாநிலம் பகதுர்கர் (Bahadurgarh) நகரில் கருணை மதிப்பெண் வழங்கியதால், 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையான நிலையில், கருணை மதிப்பெண்ணை நீக்கிய பின்னர், தற்போதைய முடிவுகளின் படி, அதிகபட்ச மதிப்பெண் 682-ஆக உள்ளது. இந்த மையத்தில் 13 பேர் 600-க்கு மேல் பெற்றுள்ளனர்.

வினாத்தாள் கசிந்த ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மையத்தில் 7 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 23 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலாகவும் எடுத்துள்ளனர். விடைத்தாளை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில் 5 பேர் 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 14 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலாகவும் பெற்றுள்ளனர்.

இதேபோல, அகமதாபாத் நகரில் இதுவரை இல்லாத வகையில், தேர்வெழுதிய 676 பேரில் 12 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருப்பதும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல்லில் தேர்வு எழுதிய 1017 பேரில், 2 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும், 52 பேர் 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.