வன்முறையைத் தணிக்கும் வகையில் பங்ளாதேஷ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
பங்ளாதேஷில் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய ஒதுக்கீட்டு முறையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது.
அரசாங்க வேலை ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் தலைமையில் பங்ளாதேஷில் இரு வாரங்களாக நடைபெற்ற போராட்டத்தில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பங்ளாதேஷை விடுவித்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய குடும்பங்களுக்கு அரசாங்க வேலையில் 30% ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒதுக்கீட்டுக் கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு அந்தக் கொள்கையை ரத்து செய்தது. ஆயினும், கடந்த மாதம் அரசாங்க மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பு மாணவர்களிடைய சினத்தை ஏற்படுத்தியது. அங்கு ஏராளமான இளையர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். 170 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட பங்ளாதேஷில் 32 மில்லியன் இளையர்கள் படிப்பின்றியும் வேலையின்றியும் உள்ளார்கள்.
இந்நிலையில், ஒருசாராருக்கு மட்டும் சலுகை வழங்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாணவர்கள் எதிர்த்து வருகிறார்கள்.
வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதனை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) பிற்பகல் 3 மணி வரை அரசாங்கம் நீட்டித்தது.
தடையை மீறுவோரைக் கண்டதும் சுட காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டாக்கா நகர வீதிகளில் ராணுவ வீரர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள்
அவசர வெளியேற்றம்
இந்நிலையில், பங்ளாதேஷில் உள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமை வரை, இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு எல்லை வழியாக 778 மாணவர்கள் இந்தியா திரும்பிவிட்டதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.
மேலும், 200 மாணவர்கள் டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்களில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது.
பங்ளாதேஷ் பல்கலைக்கழகங்களில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட தனது நாட்டு மாணவர்களுடன் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தியா வழியாக அவர்களின் சொந்த நாடு திரும்ப இந்தியா உதவி வருகிறது.
தமிழர்கள் பத்திரம்
அதேபோல, பங்ளாதேஷில் சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக வெளியேற்ற முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து உள்ளார்.
முதற்கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரு விமானங்கள் மூலம் 35 தமிழர்களையும் அடுத்தகட்டமாக 60 தமிழர்களையும் இந்திய தூதரக உதவியுடன் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசாங்கத்தின் மேல்முறையீட்டை ஏற்று ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இட ஒதுக்கீடு தொடர்பாக ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று முன்னர் அறிவித்து இருந்த உச்ச நீதிமன்றம் அதனை அவசரமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) விசாரித்தது.
பின்னர், ஒதுக்கீட்டு முறையில் உள்ள பெரும்பாலான ஒதுக்கீடுகளை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது, 93% விழுக்காட்டு அரசாங்க வேலைகள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும் எஞ்சிய வேலைகளை ஒதுக்கீட்டு முறையின்கீழ் வழங்கலாம் என்றும் அது தீர்ப்பளித்து உள்ளது.
“வன்முறைக்குக் காரணமான ஒதுக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது,” என பங்ளாதேஷ் அரசின் தலைமைச் சட்ட அதிகாரி ஏ.எம். அமின் உதின் தெரிவித்து உள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பங்ளாதேஷில் அமைதி திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.