மறைந்த கம்யூனிஸ்ட் தலைவருக்கு வியட்னாம் அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு
மறைந்த வியட்னாமிய ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நுயென் பு டிரோங்குக்கு அந்நாட்டு அரசாங்கம் இறுதிச் சடங்கை ஏற்று நடத்தப்போவதாக கூறியுள்ளது.
அதற்கு முன்னர் ஜூலை 25, 26 ஆம் தேதிகள் துக்க நாள்களாக அனுசரிக்கப்படும் என்றும் இரண்டாம் நாளான 26ஆம் தேதி அவருக்கு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் நாள்களில் பொதுவெளியில் எந்தவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்காது என்றும் அனைத்து அலுவலகங்கள், பொது இடங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அந்த அறிக்கை விளக்கியது.
டிரோங் தமது 80வது வயதில் காலமானார். வியட்னாமின் சக்திவாய்ந்த பதவியில் இருந்த அவர், நாட்டின் வேகமான பொருளியல் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
அத்துடன், பல்லாண்டுகால ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்ததுடன் நடைமுறைக்கு சாத்தியமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்து வந்தார்.
டிரோங்கின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு, நாட்டுக்கு, வியட்னாமிய மக்களுக்கு, திரு டிரோங்கின் குடும்பத்துக்கு பெரும் இழப்பு என்று வியட்னாமிய அரசு அறிக்கை கூறியது.